Navigate / search

Online Birth & Death Certificate

நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக அலைந்து திரிகின்றனர்.
இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மற்ற மாநகராட்சிகளில் ஆன்லைன் மயமாக்கப்பட்டாலும் சான்றுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை நேரில் சென்றுதான் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றுகள் கணினி மூலமாகவும், தட்டச்சு செய்யப்பட்டும் வழங்கப்படுகிறது. இப்படி பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த சிக்கல்களை போக்க மத்திய அரசு சார்பில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சென்னையில் மட்டும் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மத்திய அரசு சார்பில் நாடுமுழுவதுமாக ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்கு டெல்லியை தலைமையிடமாகக்கொண்டு ஒரே கணினி மென்பொருள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும். இவ்வாறு கூறினர்.

Leave a comment