Navigate / search

வடகிழக்கு பருவமழையின்போது திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் 55 இடங்களில் தடுப்பு நடவடிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது 55 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும், ஐஜியுமான கருணாசாகர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்துக்கனெ அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும் ஐஜியுமான கருணாசாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, கலெக்டர் நிர்மல்ராஜ், எஸ்பி மயில்வாகணன், கூடுதல் எஸ்பி அப்துல்லா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் ஐஜி கருணாசாகர் கூறியதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கண்காணிக்க மாவட்டம் தோறும் ஐஜி அளவில் சிறப்பு அலுவலரை அரசு நியமித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள என்னென்ன தேவையென்றும், மக்களுக்கான பாதுகாப்பு என்ன என்பது குறித்தும் அறிந்து கொள்ள ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் மாவட்டத்தில் 55 இடங்கள் வெள்ளம் பாதிக்கக்கூடிய ஆபத்தான இடங்கள் என கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள், காவலர்கள் என மொத்தம் 70 பேர், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு குழுவினருக்கு பயிற்சியளிப்பர். இயற்கை இடர்பாடு நடைபெறும் இடங்களுக்கு மீட்புக்குழுவினர் விரைவில் செல்லும் வகையில் குழுக்கள் அமைக்கப்படுகிறது. ஆய்வு கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் டிஜிபிக்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

பின்னர் மாவட்டத்தில் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்ள தேவையான உபகரணங்களான கயிறு, ஏணி, டியூப், பைனாகுழல், மின்சார கட்டர், அரிவாள் உள்ளிட்ட பொருட்களை ஐஜி கருணாசாகர் பார்வையிட்டார்.

 

 

Leave a comment