Navigate / search

பாம்பு, பூச்சிகள், புழுக்கள் கரும்போடோ சேர்ந்து சாறாகிட்டிருக்கு-White Sugar

‘‘ர்க்கரை ஆலைகளைப் பார்வையிட வல்லுநர் குழு வருகிறது. நீங்களும் கூட வந்தால் சிறப்பாக இருக்கும்’’னு சர்க்கரை ஆலைகளுக்கு ஆலோசகர இருக்கிற நண்பர் அழைப்பு விடுத்தாரு. சரி, சர்க்கரை ஆலைகளைச் சுத்திப் பார்க்க வாய்ப்பு கிடைச்சுதேனு புறப்பட்டுப் போனேன். மதுரமான அந்தக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்குள்ள நுழையும்போதே, போருக்குப் போற பீரங்கி வண்டிகள் மாதிரி, கரும்பு லாரிங்க வரிசையா உள்ளே நுழைஞ்சுகிட்டு இருந்துச்சு.

சர்க்கரை ஆலையைப் பார்க்க வந்த வல்லுநர்களுக்கு ரோஜாப்பூ மாலையும் செவ்விளநீரையும் கொடுத்து உபசரிச்சாங்க. அந்த வெளிநாட்டுக்குழு எங்களுக்கு முன்னாடி நடக்க, பின்னாடியே நடந்தோம். முதல்ல கரும்பைக் கொட்டி, பெரிய இயந்திரத்துல சாறு பிழிஞ்சுகிட்டு இருந்தாங்க ஆலையில வேலை செய்றவங்க. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நாக்குல எச்சில் ஊறிச்சு. உடனே, கையில வெச்சிருந்த தண்ணி பாட்டில்ல இருந்த தண்ணியைக் காலிபண்ணிட்டு, அந்த இயந்திரத்துல கொட்டிக்கிட்டிருந்த கரும்புச்சாற்றைப் பாட்டில்ல பிடிக்கப்போனேன்.

அப்போ பட்டுனு ஒரு கை வந்து பாட்டிலைத் தள்ளிவிட்டுது. ‘ஐயா, தப்பா நினைச்சுக்காதீங்க. வெல்லம் காய்ச்சுற ஆலை மாதிரி நினைச்சுட்டு, கரும்புச்சாற்றைப் பிடிச்சுக் குடிக்க நினைக்கிறீங்க. இந்தக் கரும்புச்சாறு குடிச்சா உடம்புக்கு ஆகாது. அதோ பாருங்க… பாம்பு, கரும்போடோ சேர்ந்து சாறாகிட்டிருக்கு. பூச்சிகள், புழுக்கள் என்று பலவிதமானதும், கரும்புச்சாறுல கலந்துடும். அதைச் சுத்திக்கரிக்கத்தான் பல கெமிக்கலைப் போட்டுச் சுத்தம் செய்றோம்’னு சொன்னாரு கரும்பு ஆலை ஊழியர். 

ஒவ்வொரு பகுதியா பார்த்துக்கிட்டு வந்தோம். சர்க்கரை ஆலையை விட்டு வெளியே வந்தவுடனே சர்க்கரைமேல வெறுப்புதான் உண்டாச்சு. கொஞ்ச நாளைக்கு, சர்க்கரையைப் பார்த்தா அதுல பாம்புங்க இருக்குற மாதிரியே தெரிஞ்சது.

இப்படித்தான் ஒருதடவை, கர்நாடக மாநிலத்துல இருக்குற மண்டியா பகுதிக்கு, வெல்லம் காய்ச்சுறதைப் பார்க்கப் போயிருந்தோம். அதென்ன, மண்டியாவைத் தேடிப்போகனும்னு கேட்கலாம். இந்தியாவிலேயே மண்டியா பகுதி வெல்லம்னா, அதுக்குத் தனி மதிப்பு உண்டு. இங்க விளையுற கரும்புல இனிப்புத்தன்மை கூடுதலாக இருக்கு. அதனால, இந்தப் பகுதியில உருவாகுற வெல்லத்தோட சுவை அருமையா இருக்கும். மண்டியாவுல வெல்லம் காய்ச்சுற ஆலைகளைத் தேடிப் போனோம். பாகு காய்ச்சுற வாசனை காத்துல வந்த திசையை நோக்கி நடந்தோம். ஆளுங்க வெல்லம் காய்ச்சுற வேலையில மூழ்கி இருந்தாங்க. எல்லாரையும் ஒரு மீசைக்காரர் சத்தம் போட்டு வேலை வாங்கிக்கிட்டிருந்தாரு. அவருதான், ஆலைக்கு சொந்தக்காரர்னு சொல்லாமலே தெரிஞ்சுகிட்டோம்.

‘எங்க தாத்தா காலத்திலிருந்து வெல்லம் காய்ச்சி, விற்பனை செய்துவருகிறோம். மண்டியா சுற்று வட்டாரம் முழுக்க வெல்லம் காய்ச்சுற வாசனை மூக்கைத் துளைக்கும். ஆனால், இப்போது விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலைகள் செயல்படுகின்றன. வெல்லம் தயாரிக்கும் வேலையைக் கவனமாகவும் நுட்பமாகவும் செய்ய வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் பாகு பதம் மாறி, வெல்லம் தரமில்லாமல் போயிடும்’’னு சொன்னாரு அந்த மண்டியா வெல்லம் தயாரிக்கும் விவசாயி. பிறகு பக்கத்துல இருந்த எலுமிச்சை மரத்துல, நாலு பழங்களைப் பறிச்சுக்கிட்டு போயி கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்துல வெச்சு, சாற்றைப் பிழிஞ்சு எடுத்துக் குடிக்க கொடுத்தாரு. கரும்புச்சாறு பிழியும் இடமும் சரி, கரும்புகளும் சரி பாக்குறதுக்கே சுத்தபத்தமா இருந்துச்சு.

‘கரும்புச்சாற்றை அப்படியே குடிச்சா பித்தம் ஏறிவிடும். அதனால்தான், எலுமிச்சைப் பழத்தோடு சேர்த்துச் சாறு பிழிஞ்சு குடிக்கும் பழக்கம் இருக்கு’னு சொன்னவர், வயிறு முட்ட எங்களைக் கரும்புச்சாற்றைக் குடிக்கச் சொல்லிவிட்டு, கரும்புச்சாறு பிழியும் நுட்பத்தையும் பகிர்ந்துகிட்டார்.

‘வெல்லம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சாப்பிடும் உணவுப்பொருள். அதனால், சுகாதாரமான முறையில்தான் கரும்புச்சாறு எடுத்து வெல்லம் காய்ச்சுகிறோம். வெல்லம் மஞ்சள் நிறத்தில் பளீர் என்று இருக்க வேண்டும் என்பதற்காகச் சில ரசாயனங்களைச் சேர்ப்பவர்கள் உண்டு. ஆனால், நாங்கள் முற்றிலும் இயற்கையான முறையில்தான் வெல்லம் காய்ச்சுகிறோம். வெண்டைக்காயை அரைத்து வெல்லம் காய்ச்சும்போது போட்டால், கரும்புச்சாற்றில் உள்ள கசடுகளை நீக்கிவிடும். இந்த நுட்பம் பல காலமாக இந்த மண்ணில் உள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வெல்லத்தின் நிறம் கொஞ்சம் மங்கலாகத்தான் இருக்கும். சுவைத்துப் பார்த்தால்தான் இயற்கை வெல்லத்துக்கும், ரசாயனம் கலந்த வெல்லத்துக்குமான வித்தியாசம் தெரியும். இந்தியாவில் உள்ள பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரம் சொல்கின்றன. நம் உணவில் தினமும் பத்து கிராம் வெல்லத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், ரத்தசோகை மட்டுமல்ல நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்புத் தேய்மானம்… எனப் பலவிதமான குறைபாடுகள் வராது என்பதை, உங்கள் தமிழ்நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் சொல்கிறது’’னு வெல்லத்தின் அருமையை இனிக்க இனிக்கச் சொன்னாரு.

Source: http://www.vikatan.com/pasumaivikatan/2017-oct-10/column/134667-manpuzhu-mannaru.html

 

Leave a comment