நமதுரின் நீர் ஆதாரம்… நீர் சேகரிப்பு
நமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது.
ஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக குளங்களை சென்றடையும். இதில் வாய்க்கால்களில் ஓடிய நீரை குடித்தவர்களும், அதில் குளித்தவர்களும் ஏராளம் (வீட்டில் உள்ள பெரியோர்களை கேட்டு பாருங்கள்.) இந்த நடைமுறை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை நமது ஊரில் இருந்தது.
ஆனால், தற்போது நமதூர் குளங்கள் மற்றும் வாய்க்கால்களின் நிலை குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கும் இடமாக திகழ்கிறது. இந்த குப்பைகளின் காரணமாக, ஆற்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் குளத்திற்கு வரும் நீர் தடைப்பட்டு, வீணாக கடலினை சென்றடைகிறது. இதனால் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வாய்க்கால்களும், குளங்களும் தற்போது வறண்ட நிலையில் உள்ளது. (நீர் தடம்புறண்டு வாய்க்கால்களிலும், குளங்களிலும் ஓடினால் தானே நிலத்தடி நீர் மட்டம் உயரும்.)
எனவே, இதனை தூர்வாரி மீண்டும் வாய்க்கால்களிலும், குளங்களிலும் நீர் நிரப்ப வேண்டுமென்ற பெரும் முயற்சியை நமதூர் SDPI மற்றும் PFI சகோதரர்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக KNR Unity நிர்வாகிகள் SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ராஜிக் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் கூறியது :
“கடந்த 3 வருடங்களாக நமதூரில் வற்றாத குளம் எல்லாம் வற்றிய போய் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதற்கு காரணம் ஆற்று நீர் வாய்க்கால் மூலம் குளத்திற்கு வரும் வழி வகைகள் இல்லாமல் போய்விட்டது. வாய்க்கால்கள் அனைத்தும் குப்பைகள் கொண்டு துக்கப்பட்டுள்ளது. எனவே, நம் முன்னோர்கள் அமைத்து தந்த அனைத்து வாய்க்கால்களையும் தூய்மைப்படுத்தி, அதன் மூலம் குளங்களில் நீர் நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டுமென்பதே SDPI கட்சியின் நோக்கம். அதற்கான பணிகள் சமூக நல ஆர்வலர்களின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் அனைத்து வாய்க்கால்களிலும் நீர் ஓடும். அதன் மூலம் குளங்கள் நிரப்பப்பட்டு நீர்மட்டம் உயரும். இத்தருணத்தில் இப்பணிக்களுக்காக பொருளுதவி செய்த அனைத்து நல்லுங்களுக்கும் SDPI மற்றும் PFI சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
KNR Unity தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இறைவன் இப்பெறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து சகோதரர்களுக்கும் நற்கூலி வழங்குவானாக.
பொது மக்களுக்கு KNR Unity-ன் வேண்டுக்கோள்:
குப்பைகளை தங்களுக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால்களில் கொட்டாதீர்கள். வாய்க்கால்களில் நீர் ஓடுவதன் மூலம் பூமியில் அந்நீர் உறிஞ்சப்பட்டு, தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மாறாக, வாய்க்கால்களில் குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் கொட்டுவதன் மூலம் வாய்க்கால்களில் தேங்கும் நீர் பூமிக்கு உறிஞ்ச வாய்ப்பில்லாமல் போகும். இதனால், பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல. நம் சந்ததியினரும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை, தங்களது வீட்டு வாசலில் வைத்தாலே, காலையில் துப்புரவு பணியாளர்கள் எடுத்து கொள்வர்.
நீர் அதாரத்திற்கான, முயற்சி மட்டுமே நம் சகோதரர்களுடையது.
அதை பேணி பாதுகாத்து, நம் சந்ததியினருக்கு பயன்படுமாறு வைத்துக்கொள்வது பொதுமக்களாகிய நமது தலையாய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.