பள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன ரோந்து காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக சம்பவ இடம் சென்று நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் தகவல் சொல்பவர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும், உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காவல் சரகங்களில் நிகழும் வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் போன்றவைகளை தடுக்கும் பொருட்டு பழைய குற்றவாளிகள் மற்றும் செய்முறை குற்றவாளிகளை கண்காணித்து குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு மொபட், பைக்குகளில் செல்வதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கும் விதமாக சம்மந்தப்பட்ட காவல் சரகங்களில் உள்ள பள்ளிகளுக்கு அருகில் வாகன தணிக்கை செய்யப்பட்டு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு எஸ்.பி தெரிவித்தார்.