திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது 35 பவுன் நகைகள் பறிமுதல்
திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட டாக்டரின் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கிலி பறிப்பு சம்பவங்கள்
திருவாரூர் பிடாரிகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி (வயது40). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு செய்ய வந்த 3 பேர், உமாமகேஷ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் புனவாசல் மெயின்ரோட்டு தெருவை சேர்ந்தவர் லெனின். இவருடைய மனைவி கோகிலா (40). சம்பவத்தன்று இரவு இவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கோகிலாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
தனிப்படை
திருவாரூரை போல கூத்தாநல்லூர், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதைதொடர்ந்து சங்கிலி பறிப்பில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டுகள் கண்ணன், அருள்ஜோதி, ரவி, பால்ராஜ், சிவா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், தங்க சங்கிலி திருடர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொரடாச்சேரி மேலபருத்தியூரை சேர்ந்த சுந்தர் மகன் சுதர்சன் (20), கண்கொடுத்தவணிதத்தை சேர்ந்த நாகேந்திரன் மகன் டிரைவர் அருண்ராஜ் (26), ஜெயக்குமார் மகன் அஸ்வின் (22), செந்தில் மகன் மணிகண்டன் (23), மேலபருத்தியூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஸ்வரன் (27), பெருமாளகரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் விஜய் (23) ஆகிய 6 பேர் திருவாரூர், குடவாசல், நன்னிலம், கூத்தாநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சங்கிலி பறிப்பு மற்றும் மோட்டார்சைக்கிள் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
பறிமுதல்
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சுதர்சன் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்தவர். அஸ்வின் ஐ.டி.ஐ. படித்துள்ளார். மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். விஜய் எலக்டீரிசியன் ஆவார். விக்னேஸ்வரனின் தந்தை ராமலிங்கம் ஓமியோபதி டாக்டர் ஆவார்