கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தும் நகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் டி.ஹெச்.அலிமைதீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி வழியாக குடவாசல் வரை செல்லும் சாலை கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. குறிப்பாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன.
சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் வடியாமல் தேங்குவதால் சாலைகள் சேதமடைகின்றன. இதேபோல, கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியிலும் சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை நகராட்சித் தலைவர் மற்றும் நிர்வாகத்தை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. நெடுஞ்சாலைத் துறையும் சாலையைச் சீரமைக்க முன்வரவில்லை. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கூத்தாநல்லூர் பெரிய கடைத்தெருவில் பாலம் அருகே சுமார் 100 அடி தூரத்துக்கு சாலை முற்றிலும் பெயர்ந்த நிலையில் உள்ளது. அதுபோல வடபாதிமங்கலம் வரை செல்லும் சாலையில் ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் (பொ) சந்திரசேகரன் கூறியபோது, “நகராட்சிப் பகுதியில் உள்ள 24 சாலைகளில் 8 சாலைகளைச் சீரமைக்கும் பணி சுமார் ரூ.1.5 கோடியில் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள சாலைகளை ரூ. 1.5 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலை நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.
நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன் கூறியபோது, “கூத்தாநல்லூரில் இருந்து மாவூர் வரை செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தைச் சீரமைக்க ரூ.36 லட்சத்தில் திட்டமிடப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மழைக் காலத்துக்குப் பின்னர் சாலை அமைக்கும் பணி நடைபெறும்” என்றார்.